திமுக எம்எல்ஏக்களை கண்டித்து கள்ளக்குறிச்சியில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கு எதிராக கருத்து தெரிவித்த, திமுக எம்எல்ஏக்களை கண்டித்து, கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் பாமகவினர் இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கேயன் இருவரும் கள்ளச்சாராய வியபாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

இதையடுத்து எம்எல்ஏ-க்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திக்கேயன் ஆகிய இருவரும் இன்று சட்டப் பேரவையில் செய்தியாளர்களை சந்தித்து, “தோல்வியின் விரக்தியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். எங்களது மீது குற்றம்சாட்டப்பட்டவர்களை கண்டிப்பதாகவும், குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் அரசியலை விட்டு விலகுகிறோம், குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் அரசியலை விட்ட விலகத் தயாரா?” என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதையறிந்த கள்ளக்குறிச்சி பாமகவினர் அதன் மாவட்டத் தலைவர் தமிழரசன் தலைமையில் இன்று, நான்குமுனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர்.