கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து சேலத்தில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 350-க்கும் அதிகமானோர் கைது

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் பாஜக சார்பில் சேலம் கோட்டை மைதான பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் போதை பொருட்கள், கஞ்சா மற்றும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, சண்முகநாதன், சுதிர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து பாஜக-வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர், கள்ளச் சாராயத்துக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.ராமலிங்கம், “தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. இதில் திமுக-வினருக்கு தொடர்பு உள்ளது. கள்ளச்சாராயத்தில் பிடிபட்டவர்கள் வீட்டில் திமுக-வினர் படங்கள் மற்றும் சின்னங்கள் ஒட்டப்பட்டுள்ளன. கள்ளச்சாராய விற்பனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதனால் ஏழை மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதனால், அவர்கள் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் இதற்கெல்லாம் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 350-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.