“துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்.” என்று கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அதில்,“கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்துவிட்டார். அவருக்கும் சேர்த்து விவரங்களை இங்கு வழங்குகிறேன். கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தது வேதனையை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.
மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியதால் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினேன். மேலும், விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டில் இருந்து 57 மருத்துவர்கள், செவிலியர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற நிகழ்வுகளில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உயிர் காக்கும் நிகழ்வுகள் போதுமான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மூவரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களோடு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்த சம்பவம் குறித்து எனக்கு தகவல் வந்தவுடன் கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு உள்ளிட்டோர் அங்கு அனுப்பி வைத்து மருத்துவ பணிகளை தீவிரப்படுத்தினேன்.
கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக இரண்டு நாளில் அறிக்கை கொடுக்க சொல்லியுள்ளேன். அறிக்கை கிடைத்ததும் அதன் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையை அளித்த இந்த துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கலெக்டர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். எஸ்.பி, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தீர விசாரிக்கும் பொருட்டு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எதிர்கால சமுதாயத்தை மிக மோசமான வகையில் பாதிக்கும் போதைப் பொருட்களை எந்தவகையிலும் அனுமதிக்க இயலாது என்ற அடிப்படையில், இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தீவிரமாக எடுத்து வருகின்றோம். தொடர் நடவடிக்கை குறித்து இங்கு அனைவரும் பேசினீர்கள்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இதேபோன்ற சம்பவம் தொடர்பான வழக்கினை இந்த அரசு சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது. அந்த வழக்கு இரண்டு மாவட்டங்கள் தொடர்புடையது. அதில், விழுப்புரம் வழக்கினைப் பொறுத்தவரையில், 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்; 8 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல் துறை அலுவலர்கள் 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு, விழுப்புரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட வழக்கினைப் பொறுத்தவரையில், 6 வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது; 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் 5 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 6 காவல் துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாடு அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல், போலி மதுபானங்கள் கடத்துவது மற்றும் விற்பனை செய்வது போன்ற குற்றச் செயல்கள் நடைபெறாவண்ணம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றைப் பட்டியலிட்டுச் சொல்ல விரும்புகிறேன்,
கள்ளச்சாராயம் காய்ச்சுவதைத் தடுக்க, மாவட்ட காவல் துறையுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாய் துறையினரால் அடிக்கடி சிறப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. திமுக அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது 4 லட்சத்து 63 ஆயிரத்து 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 லட்சத்து 61 ஆயிரத்து 84 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 565 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 16 லட்சத்து 51 ஆயிரத்து 633 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 42 ஆயிரத்து 19 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 28 லட்சத்து 79 ஆயிரத்து 605 லிட்டர் ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 45 நிரந்தர மதுவிலக்குச் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு சட்டவிரோத மதுபான கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயத்தில் முக்கியமாக மெத்தனால் பயன்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மெத்தனால் உற்பத்தி அலகுகள், பயனர்கள், மெத்தனால் வைத்திருப்பதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் போன்றவற்றைத் தணிக்கை செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் மாதாந்திர அறிக்கைகள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுத் தலைமையகத்தில் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால், அண்டை மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மெத்தனால் சட்டவிரோதமாக கள்ளத்தனமான முறையில் நம் மாநிலத்திற்குள் கொண்டு வரப்பட்டு இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.
மேலும், அரசின் அறிவுரையின்படி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் காவல் துறை, வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மாவட்ட மேலாளர் ஆகியோரைக் கொண்டு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளேன். இந்த அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து 14 ஆயிரத்து 606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 ஆயிரத்து 154 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இப்படி இந்த அரசானது கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும், இதுபோன்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். அதனடிப்படையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 10 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5,000 வழங்கப்படும்.
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம், இதுகுறித்து முழுமையாக விசாரித்து, தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும். அதனடிப்படையில் இந்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
”நடைபெற்ற சம்பவத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்” என்று இங்கு பேசினார்கள். உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல; தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையில் எந்தப் பிரச்சினையில் இருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான். பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். குற்றவாளிகளைக் கைது செய்து விட்டுத்தான் உங்களுக்கு பதில் அளித்திருக்கிறேன். திறந்த மனத்தோடு இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்.
எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், போதை பொருட்கள் விவகாரத்தில் அமைச்சர்கள், உயர்காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டது விசாரிக்கப்பட்டு அந்த வழக்கு நீதிமன்றத்திலும் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை. அதிமுக. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் பற்றிய பட்டியல் என் கையில் இருக்கிறது. அதையெல்லாம் வைத்து அரசியல் பேச நான் விரும்பவில்லை. துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.