தலைநகர் டெல்லியில் தண்ணீர் பிரச்சினை : அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதம்

தலைநகர் டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அண்டை மாநிலத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளார்.

அதிஷி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியபோது, டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் மற்றும் டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் உடன் இருந்தனர். திஹார் சிறையில் உள்ள முதல்வர் கேஜ்ரிவால், அதிஷியின் போராட்டம் வெற்றி பெறும் என கடிதம் மூலம் சொல்லியிருந்தார். இதனை சுனிதா தெரிவித்திருந்தார்.

தண்ணீருக்காக அல்லல்படும் மக்களின் நிலையை தொலைக்காட்சியில் கண்டு மனம் வருந்துவதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். “தாகத்துடன் வருபவருக்கு தண்ணீர் வழங்குவது நமது மரபு. டெல்லி, அண்டை மாநிலங்களின் வசம் இருந்து தான் நீர் பெற்று வருகிறது. டெல்லியில் நிலவி வரும் வெப்பத்தினால் அண்டை மாநிலங்கள் நமக்கு நீர் ஆதரவு வழங்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஹரியாணா டெல்லிக்கான பங்கினை குறைத்துள்ளது. இரண்டு பகுதியிலும் வேறு வேறு கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இருந்தாலும் இந்த நேரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல” என கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

“டெல்லியில் வரலாறு காணாத வெப்பம் நிலவி வருகிறது. அதனால் மக்களின் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. மக்களுக்கு கூடுதல் நீர் வேண்டிய சூழலில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலங்களை நம்பியே டெல்லியின் நீர் ஆதாரம் உள்ளது. தண்ணீர் வேண்டும் மக்களின் அவல நிலையை என்னால் பார்க்க முடியவில்லை. அதனால்தான் இந்த உண்ணாவிரத போராட்டம். எனக்கு இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. ஹரியாணா தண்ணீர் வழங்கும் வரை எனது இந்த ஜல சத்தியாகிரக போராட்டம் தொடரும்” என போராட்டத்தை தொடங்கிய போது அதிஷி தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை அன்று டெல்லி எதிர்கொண்டு வரும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார் அதிஷி. இதற்கு தீர்வு காணவில்லை என்றால், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது போராட்டத்தை தொடங்கியுள்ளார். டெல்லியின் ஜானக்புரா பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.