கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கிய அதிமுகவினர், இன்று கறுப்புசட்டையில் சட்டப்பேரவைக்கு வந்தனர். தொடர்ந்து சபாநாயகர் வந்ததும் சட்டப்பேரவை தொடங்கிய நிலையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். சபாநாயகர் அப்பாவு இருக்கையை முற்றுகையிட்டு உறுப்பினர்கள் அமளி செய்தனர்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அவர்கள் குரல் எழுப்பினர். கூடவே ‘பதவி விலகுங்கள் ஸ்டாலின்’ என்ற பதாகையை காண்பித்தவாறு அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் உறுப்பினர்கள் தர்ணா செய்தனர். இதையடுத்து சபாநாயகர் அவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, அவைக் காவலர்கள் அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
அப்போது, அவை முன்னவர் என்ற முறையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ எதிர்க்கட்சிகள் இன்றைக்கு விரும்பத்தகாத நிகழ்வை உருவாக்கியுள்ளன. நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து வாதாடுவதற்கு எதிர்க்கட்சி தலைவருக்கு உரிமை உண்டு. ஆனால், சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டு தான் அதனை செய்ய முடியும். கேள்வி நேரம் தான் முதல் பணி. கேள்வி நேரம் மிக முக்கியமானது. அதனால், சட்டத்தில் கேள்வி நேரத்தின் போது குற்றச்சாட்டுகள் கூறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதெல்லாம் எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியும். அப்படி இருந்தும் அவர் இப்படி நடந்து கொண்டது ஆச்சர்யாமாக உள்ளது. கேள்வி நேரம் முடிந்த பின்பே விவாதங்கள் செய்ய வேண்டும். இதை சொல்வதை கேட்க கூட அவர்கள் தயாராகவில்லை. அதனால் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என வேண்டுமென்றே இப்படி செய்துள்ளார்கள். இது தவறு. சபையில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்ததற்காக இந்த மன்றம் வருந்துகிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் தான் சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற உத்தரவிட்டார்.” என்று தெரிவித்தார்.