கள்ளச் சாராய விவகாரத்தில் தமிழக மக்கள் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது : செல்வப்பெருந்தகை

கள்ளச் சாராய விவகாரத்தில் தமிழக மக்கள் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை நிகழ்ச்சி முடிந்த பிறகு, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “கள்ளக்குறிச்சி துயர சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவுடன் அங்கு சென்று, கள ஆய்வு செய்ய இருக்கிறோம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். இந்த ரசாயன சாராயமாக இருந்தாலும் சரி, கள்ளச் சாராயமாக இருந்தாலும் சரி பின்னணியில் இருப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது. அதற்குள்ளாக கள்ளக்குறிச்சியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை விழிப்போடு இருக்க வேண்டும். அந்தந்த காவல்நிலையங்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

கிராமம்தோறும் நடப்பதை முன்னறிய உளவுத்துறை இருக்கிறது. இத்துறையை நவீனப்படுத்த வேண்டும். கிராமத்தில் திருவிழா நடந்தால் கூட கட்டுப்பாடு விதிக்கின்றனர். ஆனால் நூற்றுக் கணக்கானோர் கள்ளச்சாராயம் குடிக்கும் அளவுக்கும் வியாபாரம் பெருகியிருக்கிறது.

இதை காவல்துறை அடக்கியிருக்க வேண்டும். ஆனால், முதல்வர் உடனடியாக காவல்துறை கண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்ததோடு, ஆட்சியரை பணியிடமாற்றம் செய்துள்ளார். நடவடிக்கை உறுதியாக எடுத்திருக்கின்றனர். எனினும், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காவல்துறை அனுமதிக்கக் கூடாது. எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பதவி விலக வேண்டும் என்பார்கள்.

கோரமெண்டல் ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர், யாரும் பதவி விலகவில்லை. தற்போது கஞ்சன்ஜங்கா ரயில் விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். யாரும் வாய் திறக்கவில்லை, விபத்து என்றே கூறுகின்றனர். எதுவாயினும் தமிழக மக்களின் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.