கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் : அதிமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் மற்றும் மாஞ்சோலை விவகாரங்கள் பற்றி விவாதிக்க அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளன.

தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று முன்னாள் உறுப்பினர்கள் மறைவு தொடர்பாக இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் விற்பது போன்ற குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.” என்று தெரிவித்தார். பின்னர் விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் சட்டப்பேரவை நிகழ்வுகளை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.

இதற்கிடையே, கள்ளக்குறுச்சி மற்றும் மாஞ்சோலை விவகாரங்கள் பற்றி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதிமுக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடிதம் வழங்கின. சிபிஎம் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி நெல்லை மாஞ்சோலை மற்றும் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளார்.

அதிமுக சார்பில் வேலுமணி உள்ளிட்டோர் சபாநாயகரை சந்தித்து கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வர கடிதம் கொடுத்தனர். கவன ஈர்ப்பு தீர்மானம் நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.