சொத்து விற்பனையில் உரிமையாளரின் கைரேகை சரிபார்க்கும் வசதி : அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

ஆவணப்பதிவின் போது, சொத்தை விற்பவரின் முந்தைய விரல் ரேகைப்பதிவை ஒப்பீடு செய்து, ஆள்மாறாட்டத்தை தடுக்கும் மேம்பட்ட வசதியை அமைச்சர் பி.மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஆள்மாறாட்டம் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பதிவுத்துறை எடுத்து வருகிறது. ஆதார் இணைப்பு, ஆதார் விரல்ரேகைப் பதிவு சரிபார்த்தல் உள்ளிட்ட வசதிகள் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆவணப்பதிவின் போது சொத்தை விற்பவரின் விரல்ரேகைப் பதிவை ஒப்பிடும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில், பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் குறித்த விழிப்புணர்வு செய்தியை முன் ஆவணதாரருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதி மற்றும் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவரது விரல்ரேகை, ஆதார் மற்றும் கருவிழிப்படல தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதன் மூலம் தவறான ஆவணப்பதிவுகள் தடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆள்மாறட்டத்தை முற்றிலும் தவிர்க்கும் நோக்குடன் ஒரு நபர், சொத்தை விற்கும்போது தனது சொத்து விற்பனையை ஒப்புக் கொள்ளும் முகமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் விரல் ரேகையை பதிவு செய்வார்.

அப்போது இந்த சொத்து தொடர்பான முந்தைய ஆவணப்பதிவின் போது சொத்து உரிமையாளரிடம், வாங்குபவர் நிலையில் அவரிடம் பெறப்பட்ட விரல்ரேகையுடன் ஒப்பிட்டு, இரண்டு விரல் ரேகைகளும் ஒத்திருக்கும் பட்சத்தில் மட்டுமே பதிவுக்கு ஏற்கும் வண்ணம் ஸ்டார் 2.0 மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு பொருந்தாத நிகழ்வுகளில் சார்பதிவாளர் ஆவணப்பதிவின் உண்மை நிலையை விசாரித்து பதிவினை மேற்கொள்ளும் வண்ணம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட வசதியின் மூலம் ஆவணப் பதிவில் ஆள்மாறாட்ட மோசடி முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன் பொதுமக்களின் சொத்துக்களும் பாதுகாக்கப்படுவதை பதிவுத்துறை உறுதி் செய்கிறது.

இந்நிலையில், இவ்வாறான விரல்ரேகை பதிவு ஒப்பிடும் வசதியை சென்னையில் இன்று அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். குறிப்பாக, தென்சென்னை இணை -1 சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதியானது, கடந்த 2018-ம் ஆண்டு பிப்.13-ம் தேதிக்கு பிந்தைய ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்எல்ஏ ஆ.வெங்கடேசன், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.