கள்ளச் சாராய மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் : வேல்முருகன்

கள்ளச்சாராய மரண விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை (ஜூன்., 21) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை நிகழ்ச்சி முடிந்த பிறகு, வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எந்த ஆட்சி நடைபெற்றாலும் கள்ளச்சாராய சாவுகள் தொடர் கதையாக இருந்து வருகிறது. ஏற்கெனவே, செங்கல்பட்டு, மரக்காணம் போன்ற பகுதிகளிலும், என்னுடைய தொகுதியிலும், விஷச் சாராய சாவுகள் நடந்தேறியுள்ளன.

இதற்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். இந்த சாராய விற்பனையில் தொடர்புடைய அரசியல்வாதிகள், உடந்தையாக இருக்கின்ற காவல்துறை, மதுஒழிப்புத்துறை, மாவட்ட நிர்வாகத்தில் உள்ள உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவதை காட்டிலும், அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.

இதற்கு துணை போனவர்கள் குறித்து உளவுத்துறை மூலம் அறியப்படுபவர்கள், கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தொழிற்சாலையில் இருந்து எத்தனால் என்ற வேதிப் பொருள் வாங்கி கலக்கப்பட்டு அளவுக்கு அதிமாகி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து, லாப நோக்குடன் அங்குள்ள உயரதிகாரிகளின் ஒப்புதலுடன் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு, 3 பேர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்டோரை கொலை வழக்கில் சேர்த்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியர், காவல்துறையிடம் மனுஅளித்தேன்.

ஆனால் தற்போது வரை தொழிற்சாலை நிர்வாகம் மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. மாறாக வேதிபொருளை கடத்தியதாக தொழிலாளி மீது பழிசுமத்தி, அவரை பணியில் இருந்து நீக்கி சிறையில் அடைத்தனர். தற்போதைய சம்பவத்துக்கு வேர் என்ன என்பதை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியவர்கள் அல்ல. கடந்த கால ஆட்சிகளில் பண்ருட்டி, கடலூர், திண்டிவனம், அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் பல உயிர்கள் பலியாயிருக்கின்றன. இதற்கு சரியான முடிவை முதல்வர் எடுக்க வேண்டும். இதுகுறித்து நாளை கவன ஈர்ப்பு தீர்மானத்தை அவையில் கொண்டுவர இருக்கிறேன் என்று வேல்முருகன் தெரிவித்தார்.