கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் கள் மற்றும் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 203 லிட்டர் கள், 1,092 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இன்று காலை வரை 35-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டப் பகுதியில் பேரூர், பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய 6 உட்கோட்டங்கள் உள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், உட்கோட்டங்கள் வாரியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தந்த உட்கோட்ட காவல் நிலைய போலீஸார் மற்றும் மதுவிலக்கு போலீஸார் நேற்று முதல் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா, கள்ளச் சந்தையில் மது விற்கப்படுகிறதா, கலப்பட மது விற்கப்படுகிறதா, கள் விற்கப்படுகிறதா என இவர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கூறும்போது, “மாவட்டப் பகுதியில் போலீஸாரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பகல் நிலவரப்படி கள் மற்றும் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 203 லிட்டர் கள், 1,092 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தவிர, தொழில் ரீதியிலான பயன்பாட்டுக்காக மெத்தனால் பயன்படுத்தும், இருப்பு வைத்திருக்கும் 11 நிறுவனங்களை அழைத்து அவர்களிடம் மெத்தனால் இருப்பு, பயன்பாடு முறைகள் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள மதுபாட்டில்கள், அசல் மதுவா, கலப்பட மதுவா என்பதை கண்டறிய டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
அதேபோல், மாநகரப் பகுதியில், 20 காவல் நிலையங்கள் உள்ளன. காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், அந்தந்த காவல் நிலையங்கள் வாரியாக போலீஸார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் ஆகியோர் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மெத்தனால், எத்தனால் தொழில் ரீதியாக பயன்படுத்தும் நிறுவனங்கள், அவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, “மாநகரில் போலீஸாரின் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்கப்படுகிறதா, கலப்பட மது விற்கப்படுகிறதா என தொடர்ச்சியாக சோதனை செய்யப்பட்டு வருகிறது” என்றார்.