கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மனு – சென்னை ஐகோர்ட் நாளை விசாரணை

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி தொடர்பான வழக்கை நாளை விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 35 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் முன்னாள் பார் கவுன்சில் தலைவரான வழக்கறிஞர் டி. செல்வம், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் இன்று முறையீடு செய்தனர்.

அப்போது அவர்கள், “கள்ளச்சாராய பலி என்பது உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும், உள்ளூர் போலீஸாருக்கும், மதுவிலக்குப்பிரிவு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே கிடையாது. எனவே, இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். எனவே அந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறினர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் துறை கண்காணிப்பாளரும், மதுவிலக்குப்பிரிவு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார். இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.