கல்வி மற்றும் அறிவின் மையாக இந்தியாவை உருவாக்குவதே தனது நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “3வது முறையாக பிரதமராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் நாளந்தாவை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளந்தா என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு அடையாளம், ஒரு மரியாதை. ஒரு மதிப்பு, ஒரு மந்திரம், ஒரு பெருமை, ஒரு கதை. நெருப்பால் புத்தகங்களை எரிக்க முடியும் ஆனால் அறிவை அழிக்க முடியாது என்ற உண்மையை நாளந்தா பிரகடனப்படுத்துகிறது.
நாளந்தாவின் இந்த மறுமலர்ச்சி அதன் பழங்கால எச்சங்களுக்கு அருகில் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய வளாகம் இந்தியாவின் திறனை உலகிற்கு அறிமுகப்படுத்தும். நளந்தா பல்கலைக்கழகத்தின் மறுகட்டமைப்பு இந்தியாவின் பொற்காலத்தைத் தொடங்கிவைக்கப் போகிறது.
நாளந்தாவின் மறுமலர்ச்சி, இந்தியாவின் திறனை உலகிற்கு அறிமுகப்படுத்தும். உலகில் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம். உலகின் மிக முக்கிய அறிவு மையம் எனும் இந்தியாவின் அடையாளத்தை மீண்டும் உருவாக்குவதே எனது நோக்கம்.
வலுவான மனித விழுமியங்களின் மீது நிற்கும் நாடுகள், வரலாற்றைப் புதுப்பிப்பதன் மூலம் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தை எவ்வாறு அமைப்பது என்பது அந்த நாடுகளுக்குத் தெரியும். நாளந்தா இந்தியாவின் கடந்த காலத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்ல. உலகின் பல நாடுகள் மற்றும் ஆசியாவின் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் புனரமைப்புப் பணிகளில் நமது பங்காளி நாடுகளும் பங்கு பெற்றுள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் அனைத்து நட்பு நாடுகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பண்டைய நாளந்தாவில், மாணவர் சேர்க்கை என்பது அவர்களின் அடையாளம் அல்லது தேசியத்தின் அடிப்படையில் செய்யப்படவில்லை. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இளைஞர்கள் இங்கு வந்தார்கள். நாளந்தா பல்கலைக்கழகத்தின் இந்தப் புதிய வளாகத்தில், அதே பழமையான அமைப்பை மீண்டும் வலுப்படுத்த வேண்டும். உலகின் பல நாடுகளில் இருந்து மாணவர்கள் இங்கு வரத் தொடங்கியுள்ளனர்.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று நூற்றுக்கணக்கான யோகா பாணிகள் இந்தியாவில் உள்ளன. இதற்கு நம் ஞானிகள் எவ்வளவு தீவிர ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும்! ஆனால், யோகாவில் யாரும் ஏகபோகத்தை உருவாக்கவில்லை. இன்று உலகம் முழுவதும் யோகாவை ஏற்றுக்கொள்வதால், யோகா தினம் உலகளாவிய திருவிழாவாக மாறியுள்ளது.
இந்தியா பல நூற்றாண்டுகளாக ஒரு முன்மாதிரியாக நீடித்து வாழ்ந்து காட்டியது. முன்னேற்றத்தையும் சுற்றுச்சூழலையும் ஒன்றாக எடுத்துள்ளோம். அந்த அனுபவங்களின் அடிப்படையில், மிஷன் லைஃப் போன்ற மனிதாபிமான பார்வையை இந்தியா உலகிற்கு வழங்கியுள்ளது.
இந்தியா உலகிற்கு கல்வி மற்றும் அறிவின் மையமாக மாற வேண்டும். இந்தியா மீண்டும் உலகின் மிக முக்கியமான அறிவு மையமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இன்று ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியா மீது, இந்திய இளைஞர்கள் மீது உள்ளது. ஜனநாயகத்தின் தாயாகிய புத்தரின் இந்த நாட்டோடு தோளோடு தோள் சேர்ந்து நடக்கவே உலகம் விரும்புகிறது.
இந்த நாளந்தா நிலம் உலக சகோதரத்துவ உணர்வுக்கு புதிய பரிமாணத்தை தரக்கூடியது. எனவே, நாளந்தா மாணவர்களின் பொறுப்பு இன்னும் பெரியது. நீங்கள் இந்தியாவின் மற்றும் முழு உலகத்தின் எதிர்காலம். இந்த 25 வருட அமிர்தகாலம் இந்திய இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு மாணவருக்கும் இந்த 25 ஆண்டுகள் முக்கியமானவை. இங்கிருந்து வெளியேறிய பிறகு நீங்கள் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், உங்கள் பல்கலைக்கழகத்தின் மனித விழுமியங்களின் முத்திரையைப் பார்க்க வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.