வரும் 2050-க்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும் என்று அதானி குழும தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
கிரிசில் ரேட்டிங்கின் வருடாந்திர உள்கட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய கவுதம் அதானி, “அரசு நிர்வாகம், உள்கட்டமைப்பு வசதிகள், பசுமை எரிசக்தி ஆகிய 3 விஷயங்கள் இந்தியாவின் வளர்ச்சியை வழிநடத்தும். உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP)-ன் முதல் டிரில்லியன் டாலர்களை எட்டுவதற்கு இந்தியா 58 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. அடுத்த டிரில்லியனைப் பெற 12 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. மூன்றாவது டிரில்லியனைப் பெற ஐந்து ஆண்டுகள் ஆகின.
இந்தியா வளர்ந்து வரும் வேகம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அரசாங்கம் செயல்படுத்தும் விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அடுத்த பத்தாண்டுகளில், ஒவ்வொரு 12 முதல் 18 மாதங்களுக்கும் ஒரு டிரில்லியன் டாலர்களை இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கத் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். 2050-ல் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும். அப்போது, பங்குச் சந்தையின் மூலதனம் 40 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியிருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இதன் அர்த்தம் என்னவென்றால், அடுத்த 26 ஆண்டுகளில், இந்தியா 36 டாலர்களை தனது ஜிடிபி-யில் சேர்க்கும்.
இதுபோன்ற சாத்தியக்கூறுகளை வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை. இந்தியராக இருப்பதற்கு இதைவிட சிறந்த நேரம் இருந்ததில்லை. இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறை அதிர்ச்சியூட்டும் மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது அதன் தாக்கத்தை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதுவரை கண்டிராத உள்கட்டமைப்பு வசதிகளை நமது நாடு துவக்கி உள்ளது. இது இந்தியாவின் பல தசாப்த கால வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப் போகிறது” என தெரிவித்தார்.