பெங்களூருவில் அமேசான் பார்சலில் வந்த நாகப்பாம்பு

பெங்களூருவின் சர்ஜாபூர் சாலை பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியர், அமேசான் தளத்தில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு வந்த பார்சலில் நாகப்பாம்பு இருந்துள்ளது.

அதை கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவர்கள், பின்னர் அதனை வீடியோவாக ரெக்கார்ட் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதள பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்வது மக்களின் வழக்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அதன் காரணமாக இந்தியாவில் தினந்தோறும் கோடான கோடி ஆர்டர்களை பல்வேறு இ-காமர்ஸ் நிறுவனங்கள் டெலிவரி செய்து வருகின்றன. ஆடை, காலணி, மொபைல் போன், லேப்டாப் என அனைத்தையும் இதில் ஆர்டர் செய்து வாங்கலாம்.

வாடிக்கையாளர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப அதற்கான தொகையை செலுத்தலாம். அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளன. இந்த சூழலில் அமேசான் தளத்தில் பெங்களூரு தம்பதியினர் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். அவர்களுக்கு அந்த பார்சல் வந்துள்ளது. அதை பிரித்த போது அதில் நாகப்பாம்பு இருந்துள்ளது. நல்ல வேளையாக பார்சலில் பாம்பு இருப்பதை கவனித்த காரணத்தால் அதை முழுவதுமாக அவர்கள் பிரிக்கவில்லை. இருந்தும் அந்த பார்சலில் இருந்து பாம்பு வெளிவர முயன்றுள்ளது. ஆனபோதும் அதில் ஒட்டப்பட்டிருந்த டேப்பில் அதில் சிக்கிக் கொண்டுள்ளது.

இதைப் பார்த்து முதலில் பதறிய அவர்கள், பின்னர் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது வைரலான நிலையில், அமேசான் நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு பதில் தந்துள்ளது. “சிரமத்துக்கு வருந்துகிறோம். நாங்கள் அதை சரி பார்த்திருக்க வேண்டும். ஆர்டர் குறித்த விவரத்தை இந்த லிங்கில் பதிவேற்றவும். அப்டேட் உடன் எங்கள் குழு உங்களை தொடர்பு கொள்ளும்” என அமேசான் தெரிவித்துள்ளது.

இதற்கு நெட்டிசன்கள் எதிர்வினையாற்றி உள்ளனர். “ஆக, இப்போது அமேசான் நாகப்பாம்பையும் டெலிவரி செய்கிறது. அதனால் தான் ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னோடியாக உள்ளது”, “இப்போதெல்லாம் எனக்கு ஆன்லைன் ஆர்டர் மீதான நம்பிக்கை அறவே போய்விட்டது. நான் ஆர்டர் செய்த பார்சலை அலுவலகம் வந்து கலெக்ட் செய்து கொள்ளுமாறு டெலிவரி பிரதிநிதி சொல்கிறார். அவருக்கு எங்கள் வீடு தொலைவாக உள்ளதாம்” என நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.