கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சிலர் கும்பலாகச் சென்று கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார்கள். இதில் 6 பேர் உடல்நிலை பாதிப்புக்கு ஆளானதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் கணேசன் மகன் பிரவீன் (29), தர்மன் மகன் சுரேஷ் (46), சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவலை மறுத்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “உயிரிழந்தவர்களுக்கு வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. அதனால் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
“கள்ளச்சாராயம் இல்லை – மெத்தனால்” என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கள்ளச்சாராயம் உயிரிழப்பு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஐந்து பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பத்து பேருக்கும் மேல், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்று தெரிகிறது.
மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் நான்கு உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.