தொட்டபெட்டாவில் நுழைவுச் சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமானப் பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் இன்று முதல் மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்துக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் உதகை வடக்கு வனச்சரகம், தொட்டப்பெட்டா காட்சிமுனை பகுதியில் நுழைவுச் சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமானப் பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் ஏப்ரல் மாதத்திலிருந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது இறுதிக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் தொட்டப்பெட்டா காட்சிமுனை செல்லும் சாலை இன்று முதல் 21-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும். மேற்கண்ட நாட்களில் தொட்டப்பெட்டா காட்சிமுனை செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகளும், பிற வாகனங்களும் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது.