அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் வரும் 28-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், “அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் ஆங்கில மொழியை எளிமையாகக் கொண்டு சேர்க்கும் வகையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஜூன் 28-ம் தேதி வரை இணைய வழியில் புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
மொழிகள் ஆய்வக செயல்பாடுகளின் கீழ் வழங்கப்படும் இந்தப் பயிற்சியின் மூலம் ஆசிரியர்கள் ஆங்கிலத்தை திறம்பட எழுதுவது, பேசுவது, படிப்பது, புரிந்து கொள்வது ஆகியவற்றில் உள்ள புதிய நுணுக்கங்கள், உத்திகள் குறித்து கற்றுக்கொண்டு அதன் மூலம் மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த இயலும்.
இந்தப் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பள்ளிகளின் உள்ள உயர் தர கணினி ஆய்வகங்களில் ஆசிரியர்களுக்கான பிரத்யேக தளத்தில் வழங்கப்படும். பயிற்சிக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.