“அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிசாமி தகுதியான தலைவர் இல்லை” – அமைச்சர் பெரியகருப்பன்

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிசாமி இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்பதை அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, திமுக அரசின் மூன்றாண்டு கால சாதனை, மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றதற்கான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது. இதில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், “திமுக அதிகமான வாக்குகள் பெற்ற தொகுதி ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி. நாட்டு மக்களின் பேரன்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் பெற்றதற்கு காரணம் முதல்வரின் உழைப்பு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் உழைப்பு காரணம்.

அதிமுக, பாஜக கள்ள கூட்டணி வைத்துள்ளதாகவும், தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக தொண்டர்கள், தமிழக மக்கள் முடிவெடுத்து பாஜக கட்சியினருக்கு உரிய பாடம் புகட்டி உள்ளனர். தமிழகத்தில் பாஜக ஒருபோதும் வெற்றிபெற முடியாது. திமுக தொண்டன் ஒரு முடிவு எடுத்தால் அதை முடிக்காமல் விடமாட்டான். ஏனென்றால் இது கருணாநிதி, அண்ணா, பெரியார் மண். விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து வந்தாலும் மிகப்பெரிய வெற்றியை திமுக பெற உள்ளது.

கடந்த காலங்களில் வேகமாக ஒற்றுமையோடு பணியாற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றது போல் வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் களப்பணியாற்றி வெற்றிகளை குவித்து முதல்வரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் தமிழக மக்கள் இந்த ஆட்சிக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என பேசினார்.

அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், “பெரியார், அண்ணா, கருணாநிதி ஊட்டிய கொள்கை உணர்வை தழைக்கச் செய்யும் காரியத்தை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். தமிழர் நலன், தமிழகத்தின் நலன் போற்றும் இயக்கமாக திமுக இயக்கம் உள்ளது. இன்றைக்கு பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய நெருக்கடிக்கு காரணமாக இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கண்டவர் முதல்வர்.

அண்ணா, கருணாநிதி ஆகியவருடன் இந்த இயக்கம் முடிந்து விடும் என்று எதிரிகள் நினைத்தார்கள். ஆனால், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கும் காலத்திலேயே, அவருக்கு இணையாக மற்றொரு தலைவர் உருவாகி கொண்டு இருக்கிறார் என்ற எரிச்சலின் காரணமாக எதிர்க்கட்சியினர் உளறுகிறார்கள். அவர்களின் புலம்பலை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.

75 ஆண்டு காலமாக கொள்கை பிடிப்புடன் வாழையடி வாழையாக இந்த இயக்கம் வளர்ந்து வருகிறது. இந்த இயக்கம் வளர்ந்தால் தமிழக இனம் பாதுகாக்கப்படும். தமிழகம் வளர்ச்சி பெறும் தொடர்ந்து நூற்றாண்டு கண்ட நாயகர் கருணாநிதியின் புகழ் நிலைத்து நிற்க, கொள்கை பிடிப்புடன் இன்னும் பல ஆண்டுகள் முதல்வர் தலைமையில் இந்த இயக்கம் நல்ல அரசு தமிழகத்தை ஆள வேண்டும்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டியில், “கள்ள உறவு வைத்திருந்தவர்கள் அதனை நீட்டிக்கும் வகையில் தேர்தல் களத்தில் அதிமுக போட்டியிடுவதில்லை எனக் கூறியுள்ளனர். அது அச்சமா அல்லது அழுத்தத்தின் காரணமாக என தெரியவில்லை. இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிசாமி இயக்கத்தை வழிநடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்பதை அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது” என்றார்.

பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி மற்றும் காஞ்சி வடக்கு மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.