மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட வேண்டும் : ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தல்

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறி அவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அத்துடன் அமெரிக்க பெரும் தொழில் அதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்கின் சமீபத்திய கருத்து அவர்களது குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் மேற்கொள்ளப்படும் சிறிய முறைகேடும் (ஹேக்கிங்) மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் கூறியிருந்தார்.

ஆனால் அவரது குற்றச்சாட்டை பா.ஜனதா திட்டவட்டமாக நிராகரித்தது. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்தவித இணைய இணைப்போ, வைபை இணைப்போ, புளூடூத் இணைப்போ இல்லாதவை என கூறியிருந்தது. ஆனால் எந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தையும் ஹேக் செய்ய முடியும் என எலான் மஸ்க் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதற்கிடையே மும்பை வடமேற்கு நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம், அந்த தொகுதியில் வெற்றி பெற்ற சிவசேனா ஷிண்டே பிரிவு எம்.பி.யின் உறவினர் ஒருவரின் செல்போனுடன் இணைக்கப்பட்டு இருந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது மேலும் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திரா மாநில முன்னாள் முதல் மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: மேம்பட்ட ஜனநாயக நாடுகளில் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடைபெறுகின்றன. எனவே, நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்தும் விதமாக இந்தியாவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைவிட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.