நீட் தேர்வை நடத்துவதில் 0.001% அலட்சியம்கூட இருக்கக்கூடாது என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததை எதிர்த்தும், முறைகேடுகள் நடந்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நீட் நுழைவுத் தேர்வில் 0.001% அலட்சியம்கூட இருக்கக்கூடாது. அதுபோன்ற அலட்சியம் இருப்பதாக தெரியவந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மற்றம் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தினேஷ் ஜோத்வானி, “நீதிபதிகள் மிகவும் தெளிவாக தேசிய தேர்வு முகமைக்கு சொல்லி இருக்கிறார்கள். நீட் தேர்வு எழுதும் மாணவர்களை உங்களின் கிளையன்ட் என்று நினைக்காதீர்கள், அவர்களிடம் விரோத போக்கும் வேண்டாம், இது மாணவர்கள் மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு இடையேயான மோதல் அல்ல என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேசிய தேர்வு முகமை அலுவலர்களிடம் 0.001% அலட்சியம் இருந்தாலும் அதன் மீது கவனம் செலுத்தி அதற்கு தீர்வு காணுங்கள் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய மனு விசாரணைக்கு வர உள்ள ஜூலை 8ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். இன்றைய தேதியில், தேசிய தேர்வு முகமைக்கு எந்த வாய்ப்பையும் நீதிமன்றம் வழங்கவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது” என தெரிவித்தார்.