“ஒடிசா மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்தியுள்ள நிலையில், குறைந்தபட்சம் இந்த அளவுக்காவது கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நெல் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “உழவுத் தொழில் வேறு தொழில் செய்பவர்களுக்கு எல்லாம் உணவளித்துத் தாங்குவதால் உழவர்கள், உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள் என்கிறார் திருவள்ளுவர். உலகம் என்னும் தேருக்கே அச்சாணி போன்று விளங்குகின்ற உழவர்களை துச்சமென மதிக்கும் அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
2021-ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில், நெல்லுக்கான ஆதார விலை குறைந்தபட்சம் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்தும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போது, தமிழகத்தில் சாதாரண நெல் குவிண்டால் 2,265 ரூபாய்க்கும், சன்ன ரக நெல் 2,310 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே செல்லும் சாகுபடி செலவின் அடிப்படையில், தற்போதைய நெல் கொள்முதல் விலை என்பது மிக மிகக் குறைவு.
அதிக மகசூல் கிடைத்தாலும், இலாபம் கிடைப்பதில்லை என்ற அவல நிலை நிலவுகிறது. எனவே, நெல் கொள்முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்பது விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்தியுள்ள நிலையில், குறைந்தபட்சம் இந்த அளவுக்காவது கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பின்தங்கிய மாநிலமான ஒடிசாவிலேயே இந்த அளவுக்கு நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என்றால், தமிழகத்தில் நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு எது தடையாக உள்ளது என்று புரியவில்லை.
தமிழக அரசின் ஆண்டு பட்ஜெட் என்பது மூன்று இலட்சத்து பதினோராயிரம் கோடி ரூபாய். அதே சமயத்தில், ஒடிசா அரசின் ஆண்டு பட்ஜெட் என்பது இரண்டு இலட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, நிதி நிலைமை சீராக்கப்பட்டு இருக்கிறது என்றும், வருவாய்ப் பற்றாக்குறை குறைந்திருக்கிறது என்றும், நிதிப் பற்றாக்குறை குறைந்திருக்கிறது என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அரசின் நிதியை உயர்த்துவதற்காக, அனைத்து வரிகளும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும், விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலையை உயர்த்த திமுக அரசு தயக்கம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.
நெல் கொள்முதல் விலையை உயர்த்த திமுக அரசு தொடர்ந்து தயக்கம் காட்டுமேயானால், உழவுத் தொழிலையே கைவிடும் அளவுக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். “உழவுத் தொழில் நின்றுவிட்டால் எல்லா ஆசைகளையும் துறந்து விட்டோம் என்கிற துறவிகளுக்கும் வாழ வழியில்லை” என்ற திருக்குறள் தான் நினைவிற்கு வருகிறது. விவசாயத்திற்கென்று தனி பட்ஜெட் போடுகிறோம் என்று சொல்வதை விட, விவசாயிகளின் வாழ்வு வளம் பெற பாடுபடுகிறோம், வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபடுகிறோம் என்பதுதான் பெருமை.
இந்த வகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும் கொள்முதல் விலையை உயர்த்த திமுக அரசு கொள்கை வகுக்க வேண்டும், முனைப்பு காட்ட வேண்டும். இதனைச் செய்யாமல், உலகத்திற்கே அச்சாணியாக விளங்கும் உழவர்களை திமுக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடிக் கவனம் செலுத்தி, வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, நெல் கொள்முதல் விலையை உடனடியாக குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இல்லையெனில், அச்சாணி இல்லாத தேர் எவ்வாறு ஓடாமல் முறிந்துவிடுமோ, அதுபோல திமுக ஆட்சியும் முடிந்துவிடும்.” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.