பக்ரீத் கொண்டாட்டம், சென்னை மசூதிகளில் சிறப்புத் தொழுகை : ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு

சென்னையில் பக்ரீத் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்துக்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாள்தான் பக்ரீத் எனப்படும் ஈகைத் திருநாள். நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக விமர்சையாகக் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைத்தூதரான இப்ராஹிம் தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்தாண்டு ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை முஸ்லிம்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து காலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, எம்.எச்.ஜவாஹிருல்லா தொழுகை உரை நிகழ்த்தி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் வட சென்னை மாவட்டம் சார்பில் சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெரு பின்னி கார்ப்பாக்கிங் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.கே.அப்துல் ரஹீம், மாவட்ட தலைவர் காஜா மொய்தீன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.கே.அப்துல் ரஹீம் தொழுகை உரை நிகழ்த்தி வாழ்த்துத் தெரிவித்தார். தொழுகை முடிந்த பிறகு, முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல, சென்னை முழுவதும் உள்ள மசூதிகளில் இன்று நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

தொழுகை முடிந்து, ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றின் இறைச்சியை 3 பாகங்களாக பிரித்து, முதல் பாகத்தை தனது குடும்பத்தினருக்கும், 2-ம் பாகத்தை உறவினர்களுக்கும், 3-வது பாகத்தை ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்தனர். தொடர்ந்து, நண்பர்கள், ஏழைகளுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தனர். இதேபோல, தமிழகம் முழுவதும் இன்று முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.