வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் இவிஎம் முறையை ஒழிக்க வேண்டும் : ராகுல் காந்தி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) செயல்படும் முறையை வெளிப்படைத்தன்மை கொண்டதாக உறுதிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அவற்றை ஒழித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜனநாயக நிறுவனங்கள் கைப்பற்றப்படும்போது, மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு வெளிப்படையான தேர்தல் முறை மட்டுமே. வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எனப்படும் இவிஎம் இயந்திரங்கள் குறித்து டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவு, இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே இவிஎம் இயந்திரங்கள் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்தேகங்களை வெளிப்படுத்திய நிலையில், தற்போது எலான் மஸ்க் பதிவுக்கு பின் இவ்விவகாரம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

எலான் மஸ்க் தனது பதிவில், “மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்தப் பதிவுக்கு முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் “இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை” என பதிலளித்திருந்தார்.

பதிலுக்கு, எலான் மஸ்க்கோ, “எதையும் ஹேக் செய்யலாம்” என ராஜீவ் சந்திரசேகருக்கு பதில் கொடுத்தார். தொடர்ந்து எலான் மஸ்க் பதிவை மேற்கோள்கட்டி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “தொழில்நுட்பம் என்பது சிக்கல்களை நீக்குவது. அவை பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தால், அவற்றின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும். உலகம் முழுவதும் பல தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடையும் அபாயங்கள் கொடிகட்டிப் பறக்கும்போதும், நன்கு அறியப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த ஆபத்துக்களை மேற்கோள்கட்டும்போது ஏன் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதில் குறியாக இருக்கிறீர்கள் என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

மாநிலங்களவை எம்.பி.யும், சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவருமான பிரியங்கா சதுர்வேதி, “இது மிக உயர்ந்த மட்டத்தில் நடக்கும் ஒரு மோசடி. இன்னும் தேர்தல் ஆணையம் தூங்குகிறது” என்று விமர்சித்திருந்தார்.