மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்து – ஐந்து பேர் பலி

மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை லோக்கோ பைலட் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. இதில் 3-ல் 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளது. விபத்து நடந்ததை மட்டும் மேற்கு எல்லை ரயில்வே மேலாளர் உறுதிப்படுத்திய நிலையில் தற்போது இந்த விபத்தில் ரயிலை ஓட்டிய லோக்கோ பைலட் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டார்ஜிலிங்கின் பான்சிதேவாவில் நடந்த ரயில் விபத்து குறித்த தகவலறிந்து வருந்துகிறேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதாக தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன.” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்துப் பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிய தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 033-23508794 (பிஎஸ்என்எல்), ரயில்வே எண் 033-23833326 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.