“முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையிடத்திலும், கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களிடத்திலும் தனக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு உரிய நீரினை பெற்றுத் தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு விவசாய பெருமக்களிடையே ஏற்பட்டுள்ளது.” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் மற்றும் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். ஆனால், தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய உரிய நீரினை உரிய நேரத்தில் அளிக்க மறுப்பதை கர்நாடக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.
காவேரி நீரில், தமிழகத்தின் பங்கான 177.25 டி.எம்.சி. அடி நீரை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்பதும், இந்த நீர் மாதாந்திர அடிப்படையில் திறக்கப்பட வேண்டும் என்பதும், இதன் அடிப்படையில் ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீர் அளிக்கப்பட வேண்டும் என்பதும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால், இதனை அளிக்க மறுத்துவரும் கர்நாடக அரசு உபரி நீரை மட்டுமே அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்த ஆண்டு, மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததன் காரணமாக, டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, குறுவை சாகுபடி பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கக்கூடியது. நடப்பாண்டில். இதுவரை காவேரி படுகையில் இயல்பை விட அதிக அளவு மழை பெய்துள்ளதையும், இந்த ஆண்டு பருவமழை இயல்பாக இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளதையும் கருத்தில்கொண்டு, தண்ணீரை மாதாந்திர அடிப்படையில் கர்நாடகம் தமிழகத்துக்கு திறந்துவிட்டால்தான் தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடியினை மேற்கொள்ள முடியும்.
இது, இரண்டு மாநிலங்களுக்கும் பயனளிக்கக்கூடிய ஒன்று. இதைச் செய்யாமல், கர்நாடகாவில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிய பிறகு, கர்நாடகத்தின் தேவைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, தென்மேற்கு பருவமழை முடிகின்ற தருவாயில் உபரி நீரை மட்டும் தமிழகத்துக்கு அளிப்பது என்பது தமிழகத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் செயல்.
தமிழகத்தின் குறுவை சாகுபடி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் மாதாந்திர அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டுமென்ற உத்தரவினை உச்ச நீதிமன்றமும், காவேரி நடுவர் மன்றமும் பிறப்பித்தது. இந்த நோக்கத்தினையே சிதைக்கும் வகையில் கர்நாடக அரசின் செயல் அமைந்துள்ளது.
தமிழக அரசு சார்பில், காவேரி ஒழுங்காற்றுக் கூட்டத்தில் இது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையிடத்திலும், கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களிடத்திலும் தனக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு உரிய நீரினை பெற்றுத் தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு விவசாய பெருமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சருடன் பேசி, தேவையான அழுத்தத்தை கொடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி மாதாந்திர அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.