“டெஸ்லா கார்களையும் ஹேக் செய்யலாம்” – மஸ்குக்கு ராஜீவ் சந்திரசேகர் பதிலடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எனப்படும் இவிஎம் இயந்திரங்கள் குறித்து டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவு இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மீண்டும் தனது பதிலடியை தற்போது தந்துள்ளார்.

“அனைத்து மின்னணு இயந்திரங்களையும் ஹேக் செய்யலாம் என மஸ்க் சொல்வது தவறானது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஏனெனில், கால்குலேட்டரையோ, எலக்ட்ரானிக் டோஸ்டரையோ ஹேக் செய்ய முடியாது. அந்த வகையில் இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மேம்படுத்தப்பட்ட நவீன இயந்திரம் அல்ல. வாக்கு எண்ணவும், பதிவான வாக்குகளை சேகரித்து வைக்கும் ஒரு இயந்திரம். அவ்வளவு தான். அதனால் அவர் நினைப்பது போல இதனை ஹேக் செய்ய முடியாது.

நான் எலான் மஸ்க் அல்ல. அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இருந்தாலும் தொழில்நுட்பம் குறித்த சில புரிதலை நானும் பெற்றுள்ளேன். அந்த வகையில் உலகில் பாதுகாப்பான எலக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் தயாரிப்பு எதுவும் இருக்க முடியாது என சொல்லுவது எப்படி இருக்கிறது என்றால் டெஸ்லா கார்கள் அனைத்தையும் ஹேக் செய்யலாம், வானூர்தி, ராக்கெட், கால்குலேட்டர் போன்றவற்றை ஹேக் செய்யலாம் என சொல்வது போல உள்ளது” என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

“மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்” என்று தனது எக்ஸ் தள பதிவில் மஸ்க் தெரிவித்தார்.

“இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை” என அதற்கு ராஜீவ் சந்திரசேகர் பதில் தந்தார். “எதையும் ஹேக் செய்யலாம்” என ராஜீவ் சந்திரசேகருக்கு பதில் கொடுத்தார் மஸ்க். இது இந்திய அரசியலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.