‘‘ஈரோடு கிழக்கு போன்றே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடக்கும் என்பதால், அத்தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை’’ என மதுரையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் பிவி.கதிரவன் இல்லத் திருமண விழா இன்று நடந்தது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அதிமுக எழுச்சியோடும், வலிமையோடும் உள்ளது என்பதை இந்த நேரத்தில் சுட்டி காட்டுகிறேன். அதிமுகவுக்கும், ப.சிதம்பரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து அதிமுகவில் எடுத்திருக்கும் முடிவு. அவரது கட்சியில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நடந்தவை உங்களுக்கு தெரியும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்தது. வாக்காளர்களை ஆடு, மாடுகளை போன்று அடைத்து வைத்து திமுக கொடுமைப்படுத்தியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகளை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் மாநில அரசுக்கு துணை போனார்கள்.
இடைத்தேர்தலில் அமைச்சர்கள் முகாமிட்டு ஆட்சி அதிகாரம், பண பலத்தை பயன்படுத்தி அதிகமான பரிசு பொருட்களை கொடுத்து தேர்தலில் தில்லுமுல்லு செய்தனர். ஈரோடு கிழக்கு போன்றே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடக்கும் என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. விழுப்புரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு 6000 வாக்குகள் குறைவாகத் தான் கிடைத்தது. விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறுவதற்கு திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை வாரி இரைப்பார்கள்.
பூத் வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பணத்தை கொடுப்பர். விக்கிரவாண்டியில் ஜனநாயக படுகொலை நடக்கும். சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது. ஆகவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இத்தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேறு எந்த காரணமும் இல்லை.
ஈரோடு கிழக்கில் கூட்டணி கட்சிக்காக 36 அமைச்சர்கள், வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து இருந்தனர். அவர்களை விடுவிக்கவில்லை என்றால் நானே நேரில் வருவேன் என்ன சொன்ன பிறகு வாக்காளர்களை ஊர், ஊராக அழைத்துச் சென்றனர். கடந்த 2019-ல் நடந்த மக்களவை தேர்தலில் திமுக 38 இடங்களை பிடித்தது. 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களை பிடிக்கும் எனக் கூறினர். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக 75 இடங்களை பிடித்தது. சட்டமன்றத் தேர்தல் வேறு, மக்களவை தேர்தல் என்பது வேறு. மக்கள் தேர்தல்களை பிரித்து பார்த்து வாக்களிக்கின்றனர்.
2019-ல் மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும், நிலக்கோட்டையில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையிலும், மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் , மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என பிரித்துப் பார்த்து சிந்தித்து வாக்களிக்கின்றனர். 2014 மக்களவை தேர்தலில் திமுக மிகக் குறைவான இடங்களில் வென்றது. அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை.
அது போன்று தான் மாறி, மாறி வெற்றி, தோல்விகள் கிடைக்கும். அரசியல் கட்சிகளை பொறுத்த அளவுக்கு எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி தான் வரும். 2026-ல் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி அதிக இடங்களை வென்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று இபிஎஸ் கூறினார்.
திருமண நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்பி.உதயகுமார், தளவாய் சுந்தரம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையிலுள்ள முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் வீட்டுக்குச் சென்றார். அவரது தாயார் மறைந்ததையொட்டி, சரவணனுக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.