“இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பதே எங்களுக்கு முதல் வெற்றி” – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற இயலாமையை மறைக்க சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் குவைத்தில் உயிரிழந்த சின்னதுரையின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதன் பின்னர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “திமுக ஆட்சியில் தான் அயலக தமிழர் நலத்துறை செயல்படுகிறது. தமிழக முதல்வரின் தீவிர முயற்சியால் குவைத்தில் இறந்து போனவர்களின் உடலை மிக விரைவாக பெற்று சொந்த கிராமங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு அந்தந்த கிராமங்களில் அரசு மரியாதை செலுத்திய பிறகு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

உடனடியாக அரசு அறிவித்த நிவாரணமும் வழங்கப்பட்டு விட்டது. விவசாயிகள் கோரிக்கை வைக்காமலேயே தமிழக முதல்வர் குறுவை சிறப்புதொகுப்பு வழங்க உத்தரவிட்டார். அதன்படி குறுவை தொகுப்பு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. எந்த ஒரு விவசாயியும் விவசாய சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபடாமலேயே அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் முதல்வருக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். நானும் விவசாயி என்ற முறையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பதே எங்களுக்கு முதல் வெற்றி ஆகும். ஆனால் அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நகைப்புக்கு உரியது. புதுச்சேரியை சேர்த்து தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தேர்தல் நடந்துள்ளது. இதுவே மிக முக்கிய சாட்சியாகும். சிதம்பரம், கடலூர் தொகுதிகளில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தேர்தல் நடந்துள்ள நிலையில் விக்கிரவாண்டி தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது வேடிக்கையாக உள்ளது. இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற இயலாமையை மறைக்க சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் ஏன் நிற்கவில்லை என்பது இன்னும் சில காலங்கள் கழித்தே தெரியும். எல்லாம் ஒரு கணக்காகவே இருக்கும். அந்த கணக்கு என்ன என்பது விரைவில் தெரியும். அந்த சூசகமும் விரைவில் தெரியும்” என்று எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறினார்.