விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்தல் பணிக்குழு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்ல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்கத் துணைத் தலைவர் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிட இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். அதிமுக, தேமுதிக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததால், மும்முனைப் போட்டி உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் வி.ஆர்.முஹமது தலைமையில் 10 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளது.