காஷ்மீர் நிலவரம் குறித்து உயர்மட்ட குழுவுடன் அமித்ஷா மீண்டும் ஆலோசனை

பயங்கரவாத தாக்குதல்களை கையாள்வதற்கான தயார்நிலை குறித்து உள்துறை மந்திரியிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 9-ந்தேதியில் இருந்து அடுத்தடுத்து மூன்று பயங்கரவாத சம்பவங்களால் ரியாசி, கதுவா மற்றும் தோடா ஆகிய இடங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரியாசியில் நடந்த தாக்குதலில் ஒன்பது யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஜவான் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார், ஏழு பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தனர். இதே போன்று நடத்தப்பட்ட மற்ற தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்.

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தொடர்ச்சியான பயங்கரவாத சம்பவங்களையடுத்து பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் அஜித் தோவல் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், பாதுகாப்பு படைகளை அனுப்புவது குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அமித்ஷா, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை குறித்து நேற்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஜம்மு காஷ்மீரில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை கையாள்வதற்கான தயார்நிலை குறித்து உள்துறை மந்திரியிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று விரிவான கூட்டத்திற்கு அமித்ஷா அழைப்பு விடுத்தார். இதனையடுத்து டெல்லியில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அமர்நாத் யாத்திரைக்கான தயார்நிலை குறித்தும் அமித்ஷா இந்த கூட்டத்தில் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.