‘‘காவேரி நீரை பெறாததால் 5 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’’ – ஓபிஎஸ்

‘‘டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பலன் கிடைப்பது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறதே தவிர, இதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை.’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பருவமழை தாமதமாகி வருவதால், டெல்டா மாவட்ட உழவர்களின் நலன் பாதிப்படையக் கூடாது என்பதற்காக டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், விவசாயிகளுக்கு மிகப்பெரிய பலன் கிடைப்பது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறதே தவிர, இதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை.

பெரும்பாலான டெல்டா விவசாயிகள் காவேரி நீரையே நம்பியுள்ளனர். ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 12 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படும். ஆனால், இப்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறுவைத் தொகுப்பு சிறப்புத் திட்டத்தின்மூலம் அதிகபட்சம் ஒன்றரை இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் அதிகபட்சம் ஒரு இலட்சம் விவசாயிகள் மட்டுமே பயன்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆழ்துளை கிணறுகள் இருக்கும் விவசாய நிலங்கள் மட்டுமே பயன்பெற முடியும். இதிலும், மயிலாடுதுறை, நீடாமங்கலம் போன்ற இடங்களில் உப்பு நீர் வருவதாகவும், இந்த நீரில் சாகுபடி மேற்கொண்டால் மண்வளம் போய்விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த குறுவை தொகுப்புத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நடவு மானியம், நுண்ணூட்ட கலவை மானியம், துத்தநாக சல்பேட் மானியம், ஜிப்சம் மானியம், விதை மானியம் ஆகியவை வெகு குறைவாக வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய 24 மணி நேர மும்முனை மின்சாரம் தேவை என்ற நிலையில், மும்முனை மின்சாரம் பற்றி ஏதும் தெரிவிக்காதது விவசாயப் பெருமக்களிடையே மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

ஆழ்துளை கிணறு இல்லாத நிலையில், குறுவை சாகுபடி மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் எந்தப் பயனும் இல்லை. காவேரியில் நமக்குள்ள நீரை கேட்டுப் பெறாததன் காரணமாக கிட்டத்தட்ட 5 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, 10 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

காவேரி நீரை நம்பி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு எவ்விதமான நஷ்டஈடும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் இல்லை என்பது மிகவும் வேதனையளிக்கும் விஷயம். இதன் காரணமாக, இந்த ஆண்டு நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தவிர, கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யப்படவில்லை.

இதிலிருந்து, விவசாயிகள் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க, அனைத்து உழவர்களுக்கும் மிகப் பெரிய திட்டத்தை அறிவித்ததுபோல திமுக அரசு விளம்பரப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, 24 மணி நேர தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும், நடவு மானியம், நுண்ணூட்ட கலவை மானியம், துத்தநாக சல்பேட் மானியம், ஜிப்சம் மானியம், விதை மானியம் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையான மானியத்துடன் வழங்கவும், இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெற முடியாத பெரும்பாலான விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கவும், காவேரியில் ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’ என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.