‘‘இந்தியாவின் தாய் இந்திரா காந்தி’’ – பாஜகவின் முதல் கேரள எம்பி சுரேஷ் கோபி புகழாரம்

கேரளாவின் முதல் பாரதிய ஜனதா எம்.பி.-யான சுரேஷ் கோபி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை “இந்தியாவின் தாய்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

கேரளாவின் முதல் மற்றும் ஒரே மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினரான நடிகர் சுரேஷ் கோபி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக சமீபத்தில் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து திருச்சூரில் உள்ள மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் கேரள முதல்வருமான கருணாகரனின் நினைவிடமான ‘முரளி மந்திரத்திற்கு’ சென்று வந்தார். பின்னர் பேசிய அவர், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஈ.கே.நாயனார் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.கருணாகரன் ஆகியோர் “தனது அரசியல் குருக்கள்”. தலைவர் கருணாகரனின் மனைவியை நான் அம்மா என்றுதான் அழைப்பேன். இந்திரா காந்தியை நாம் எவ்வாறு இந்தியாவின் தாயாகப் பார்க்கிறோமோ அதுபோலத்தான்” என தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் கே.கருணாகரனின் மகன் கே முரளிதரனை, சுரேஷ் கோபி தோற்கடித்தார். தொடர்ந்து பேசிய சுரேஷ் கோபி, “யாரையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால், எனது தலைமுறையில் கருணாகரன் மிகவும் துணிச்சலான ஒரு தலைவராக இருந்தார். அவர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை இருக்கிறது. இயல்பாகவே, அவர் சார்ந்த கட்சியின் மீதும் எனக்கு விருப்பம் உண்டு. மற்ற கட்சித் தலைவர்கள் மீதான எனது இந்த அபிமானம், எனது “அரசியல் கருத்து” அல்ல. நான் தற்போதுள்ள கட்சிக்கு “மாறாத விசுவாசத்தை” கொண்டிருக்கிறேன்.

ஒரு இந்தியனாக, நாட்டிற்காக நிற்கும் ஒரு மனிதனாக, எனக்கு மிகத் தெளிவான அரசியல் உள்ளது. அதனை உடைக்கக் கூடாது. சிலர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை என் இதயத்திலிருந்து வருகிறது. அதற்கு நீங்கள் அரசியல் சாயம் பூசக்கூடாது. இந்திரா காந்தி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த கே.கருணாகரன், கேரளாவுக்கு சிறந்த பலன்களை பெற்று தந்தார். பா.ஜ.க.வின் ஓ.ராஜகோபால் மட்டுமே அவருக்கு இணையானவராக இருக்க முடியும்” என குறிப்பிட்டார்.