விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவார்.
விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸை இன்று தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி எம்எல்ஏவான திமுகவைச் சேர்ந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாதக சார்பில் டாக்டர் அபிநயா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.