மோடியின் கால்களை நிதிஷ்குமார் தொட்டது பீகாருக்கே அவமானம் – பிரசாந்த் கிஷோர்

பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று உரையாற்றிய பிரசாந்த் கிஷோர் முதல்வர் நிதிஷ்குமாரை தாக்கி பேசினார்.

அக்கூட்டத்தில் பேசிய அவர், “நிதிஷ்குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான் இப்போது ஏன் அவரை விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அப்போது அவர் வித்தியாசமான மனிதர். அவருடைய மனசாட்சி அப்போது விற்கப்படவில்லை. ஒரு மாநில முதல்வர் என்பது அம்மாநில மக்களின் பெருமை. ஆனால், மோடியின் பாதங்களைத் தொட்டதால் பீகாருக்கு நிதீஷ் குமார் அவமானத்தை ஏற்படுத்தினார்.

நிதிஷ்குமாரின் கட்சி மக்களவை தேர்தலில் 12 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் தவித்த பாஜகவின் இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியாக உருவெடுத்தது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகம் பேசப்படுகிறது. ஆனால் பீகார் முதல்வர் தனது பதவியை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்? பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தனது செல்வாக்கை அவர் பயன்படுத்தவில்லை.

2025 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சியில் தொடர்வதை உறுதிப்படுத்தவே மோடியின் கால்களை அவர் தொடுகிறார்” என்று காட்டமாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் பதவிப் பிரமாணத்திற்கு முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்டு நிதீஷ் குமார் வணங்கியதைக் குறிப்பிட்டு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.