“மோடிக்கு நன்றி; அவர் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் நாங்கள் வென்றோம்” – சரத் பவார்

“மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிராவில் நரேந்திர மோடி எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தாரோ அங்கெல்லாம் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே பிரதமர் மோடிக்கு நன்றி” என தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அணிக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவ சேனா (உத்தவ் தாக்கரே) அடங்கிய மகா விகாஸ் அகாதி களம் கண்டது. இந்த தேர்தலில், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 31 தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதில், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், சிவ சேனா (உத்தவ் தாக்கரே) 9 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

தேர்தல் வெற்றியை அடுத்துப் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலி, மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. எனவே, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சி 150 இடங்களில் போட்டியிடும் என கூறினார்.

இது ஒருபுறம் இருக்க மகாராஷ்டிராவின் சட்ட மேலவைக்கு காலியாக உள்ள 4 இடங்களுக்கு சிவ சேனா (உத்தவ் தாக்கரே) தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தார். இதன் காரணமாக, கூட்டணி பிளவுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மகா விகாஸ் அகாதி சார்பில் மும்பையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே, சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சரத் பவார், “தேர்தலின்போது மகாராஷ்டிராவில் நரேந்திர மோடி எங்கெல்லாம் ரோட் ஷோ நடத்தினாரோ, பொதுக்கூட்டம் நடத்தினாரோ அங்கெல்லாம் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. அதற்காக நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

இதையடுத்துப் பேசிய உத்தவ் தாக்கரே, “400 இடங்களில் வெற்றி என்ற முழக்கத்தை பாஜக முன்வைத்தது. நல்ல நாட்கள் வரப்போவதாகக் கூறினார்கள். மோடி வாக்குறுதிகளை அளித்தார். இவையெல்லாம் என்ன ஆனது? மூன்று கால்களைக் கொண்ட ரிக்ஷா என எங்கள் கூட்டணியை பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்தார். தற்போது பாஜக அரசும் அப்படித்தான் இருக்கிறது. மகா விகாஸ் அகாதி கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. நாங்கள் ஒற்றுமையாக முன்னேறிச் செல்வோம். எங்களோடு யாரேனும் கூட்டணி வைக்க விரும்பினால் நாங்கள் அது குறித்து பரிசீலிப்போம்” எனத் தெரிவித்தார்.