மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. இந்த தடைக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த தடை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டன. இந்த தடைக்காலத்தில் படகுகளுக்கு வண்ணம் பூசுவது, படகுகளின் இயந்திரங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது, வலைகளை சீரமைப்பு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டனர்.
கடந்த 4 நாட்களாக கடலுக்கு செல்ல தயாரான மீனவர்கள் படகுகளில் டீசல் நிரப்புவது, ஐஸ் ஏற்றுவது, உணவுக்கான அத்தியாவசியப் பொருள்களை ஏற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், அதிகாலையிலேயே மிகுந்த எதிர்பார்ப்புடன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நாகை மாவட்ட மீனவர்கள், கடலில் மீன்கள் அதிகம் கிடைக்க வேண்டி, கடல் மாதாவை வேண்டிக்கொண்டு உற்சாகத்துடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அதேபோல, காரைக்கால் மீனவர்களும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு பூஜை செய்து, கடல் மாதாவை வேண்டி கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.