இங்கு மதவாத அரசியலுக்கு இடமில்லை என தேர்தல் முடிவுகள் மூலம் தமிழக மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா கோவையில் நடக்க உள்ளது. இது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தும் விழா. தமிழக முதல்வர் ஸ்டாலினின் 3 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றாகத்தான் தேர்தல் முடிவுகளை நாம் பார்க்க வேண்டும்.
அதேசமயத்தில், தமிழகத்தில் திராவிட மண்ணில் மதவாத அரசியலுக்கு இடமில்லை என தமிழக மக்கள் இந்தத் தேர்தலில் தங்கள் வாக்குகள் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் ஒரு மாற்றத்துக்கான அறிகுறி. ஒரு புதிய ஆரம்பம் என முன்னரே தெரிவித்துள்ளேன். மதவாத பாஜக வீழ்த்தப்பட முடியாத சக்தி இல்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் நிருபித்துள்ளன. தனிப்பெரும்பான்மை பாஜக அரசுக்கு இல்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அவர்கள் ஆட்சி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தன்னிச்சையாக, மக்கள் விரோதமாக சில சட்டங்களை அவர்கள் கொண்டு வந்தனர். இனிமேல் அதற்கு வாய்ப்பில்லை. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.
இது ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. சர்வாதிகாரமான போக்குக்கு இனிமேல் வாய்ப்பில்லை. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவர் பெரிய ஆளுமை. நான் முதல் தடவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் செல்கிறேன். இந்தியா கூட்டணியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழிகாட்டுதலோடு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
திருச்சி மக்களவைத் தொகுதிக்கு மட்டுமல்லாமல், தமிழக மக்களுக்காகவும் பாடுபடுவேன். தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை. 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர். பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததற்கு தமிழக தேர்தல் முடிவும் காரணம். உத்தரப் பிரதேசத்திலும் பாஜகவுக்கு தோல்வி கிடைத்துள்ளது. மதவாத அரசியலுக்கு இங்கு இடமில்லை என தமிழக மக்களைப் போலவே உத்தரப்பிரதேச மக்களும் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். விக்கிரவாண்டி தொகுதியிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும். திமுக வேட்பாளர் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம். திமுக கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தனி இயக்கம் என்பதால் இனிமேல் எங்கள் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்.
நாம் தமிழர் கட்சிக்கும் எங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அக்கட்சியினர் தனித்து நின்று 8 சதவீதம் வாக்குகள் பெற்றது பாராட்டத்தக்கது. மனிதாபிமான அடிப்படையில், வேலைவாய்ப்பை இழந்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, அரசு தேயிலைத் தோட்டங்களில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று துரை வைகோ கூறினார்.