குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை உடலுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சின்னதுரை (42). இவர் குவைத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தார் .
இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது, சத்யா என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குவைத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த அவரது உடல் நேற்றிரவு 12.30 மணி அளவில் முட்டம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.
உடலைப் பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இன்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ. அருண் தம்புராஜ், சிதம்பரம் சார்-ஆட்சியர் ராஷ்மி ராணி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராம் ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் கிராம மக்களின் கண்ணீர் அஞ்சலி உடன் அதே கிராமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருமணமாகி 5 வருடம் ஆகிய நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்து விட்டு இனி வரும் நாட்களில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கனவோடு சின்னதுரை இருந்து உள்ளார். மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் சொந்த ஊருக்கு திரும்புவதாக குடும்பத்தினருக்கு தெரிவித்து இருந்த சூழலில் தான் எதிர்பாராத விதமாக இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சின்னதுரையின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உடலை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட முதல்வருக்கும், சொந்த கிராமத்தை சார்ந்த வேளாண் மற்றும் உழவர் நலதுறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திற்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் சின்னதுரையின் மனைவி சத்யா நர்சிங் முடித்திருப்பதால் அரசு வேலை கிடைக்க உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.