எனது தந்தை எடியூரப்பாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு திட்டமிட்ட அரசியல் சதி என்று அவரது மகனும் கர்நாடக பாஜக தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு 100% நம்பிக்கை இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் சதி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கர்நாடக மக்களின் ஆசீர்வாதங்கள், கோடிக்கணக்கான இதயங்களின் பிரார்த்தனைகள் ஆகியவை நீதியின் கோயிலில் வெளிப்பட்டன. எடியூரப்பாவுக்கு எதிரான சதி அரசியல் தொடர்கிறது. அதேநேரத்தில், நீதியின் பாதையில் அவர் சதிகளை முறியடித்துள்ளார். போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருக்கிறது. இதன்மூலம், எடியூரப்பாவுக்கு சட்டத்தின் மீது இருக்கும் மரியாதை நிரூபணமாகியுள்ளது. வரும் நாட்களில் நீதி கோயிலில் உண்மை வெல்லும் என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “முக்கிய வேலை காரணமாக நான் டெல்லி சென்றிருந்தேன். 17-ம் தேதி நான் வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தேன். அனைத்தும் அனைவருக்கும் தெரியும். எனக்கு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நீதி கிடைக்கும். வரும் 17ம் தேதி ஆஜராவேன்” என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் உங்களுக்கு எதிராக அரசியல் சதி இருப்பதாகக் கருதுகிறீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த எடியூரப்பா, “தற்போதைய நிலையில் இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், அவர்கள் செய்த வேலையால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. காலம் அனைத்தையும் தீர்மானிக்கும். உண்மை என்ன என்பது மக்களுக்குத் தெரியும். தந்திரங்கள் செய்பவர்களுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்” என குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, உதவி கோரி தனது தாயுடன் வந்த 17 வயது சிறுமியை எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மார்ச் 14ம் தேதி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தொடர்ந்து, ஜூன் 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் முதல்வருக்கு சிஐடி சம்மன் அனுப்பியது. அதற்கு பதில் அளித்த எடியூரப்பா, தான் தற்போது டெல்லியில் இருப்பதாகவும், வரும் 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாகவும் தெரிவித்திருந்தார். எடியூரப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் கோரும் விண்ணப்பத்தை சிஐடி, பெங்களூரு விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை நீதிமன்றம் ஜூன் 13 பிறப்பித்தது.
இதையடுத்து, எடியூரப்பா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது. இதையடுத்து, அவரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து நேற்று (ஜூன் 14) தீர்ப்பளித்தது. மேலும், சிஐடி விசாரணைக்கு வரும் 17-ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.