ஹிஜாப் அணிவதற்குப் பதிலாக, துப்பட்டாவால் தலையை மூடிக்கொள்ள கல்லூரி நிர்வாகம் அனுமதித்த நிலையில், பணியில் மீண்டும் சேர வேண்டாம் என்ற முடிவை தான் எடுத்துள்ளதாக ஆசிரியை சஞ்சிதா காதர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான எல்ஜேடி சட்டக் கல்லூரியில் ஆசிரியையாக சுமார் மூன்று ஆண்டு காலம் பணியாற்றி வந்தவர் சஞ்சிதா காதர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அவர் ஹிஜாப் அணிந்து பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மே 31-ம் தேதிக்கு பிறகு பணியிடத்துக்கு ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என சஞ்சிதா காதரிடம் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து ஜூன் 5-ம் தேதி தனது பணியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ஹிஜாப் அணிவதற்குப் பதில் துப்பட்டாவால் தலையை மூடிக்கொள்ள அனுமதிப்பதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் சஞ்சிதா காதருக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கு, தனது முடிவை ஒரு வாரத்தில் தெரிவிப்பதாக சஞ்சிதா கூறி இருந்தார்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 13) கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “உங்கள் உத்தரவை கவனமாக பரிசீலித்த பிறகு, உங்கள் நிறுவனத்தில் மீண்டும் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். புதிய வாய்ப்புகளைத் தேடுவதே, இந்த நேரத்தில் சிறந்த வழியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று சஞ்சிதா காதர் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவை மதிப்பதாகவும், அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துவதாகவும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே கல்லூரியில் பணியாற்றுவது தனக்கு ஏற்றதாக இருக்காது என்று சஞ்சிதா காதர் தெரிவித்துள்ளார்.