கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இனையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக இரத்ததான விழிப்புணர்வு நாள் கருத்தரங்கம் சிறப்பாக இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார். இயக்குநர் குமதா, முதல்வர் கவிதா, கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புதுகைப் பாவை இலக்கியப் பேரவையின் செயலர், கவிதாயினி, சே.சுசிலாதேவி தொடக்கவுரையாற்றினர்.
சிறப்பு விருந்தினராக வாசகர் பேரவையின் செயலர் விஸ்வநாதன் கலந்து கொண்டு வினாடி- வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசும் வழங்கி பேசியது- 1901-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டின் மருத்துவர் கார்ல் லேண்ட்ஸ்டீனர் ஏ.பி.ஒ-இரத்த வகையைக் கண்டுப்பிடித்தார். அதற்காக அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. அவரை கௌரவிக்கும் விதமாகவும், இரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அவருடைய பிறந்தநாளை உலக இரத்தக் கொடையாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தானத்தில் சிறந்தது இரத்ததானம். இரத்த தானத்தின் மூலம் பெறுபவரும், கொடுப்பவரும் பயன் பெறுவர். இரத்த தானம் செய்வதற்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்ற மனிதாபிமானமும் இருந்தாலே போதும். இதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். தற்போதைய அறிவியல் வளர்ச்சியால், இரத்தத்தில் உள்ள நான்கு வகைகளை தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.
அதன்படி, ஒரு ஆண் முறையாக ஆண்டிற்பு நான்கு முறை இரத்த தானம் செய்தால் 16 உயிர்களைக் காப்பாற்ற முடியும். அதே நேரத்தில் உடல் அளவில் இரத்ததானம் செய்தவரும் ஆரோக்கியமானவராக மாற முடியும். ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதற்கும் இரத்த தானம் பயன்படுக்கிறது. ஏனென்றால் இரத்ததானம், எந்தவித தீய பழக்கங்கள் இல்லாத நல்லவர்களால் மட்டுமே செய்ய இயலும். ஆகவே இரத்த தானம் செய்வதை இளையோர்கள் வாழ்வியலாகக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் நா.பூர்ணிமா வரவேற்றார் முடிவில் இனையோர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் த.சூர்யா நன்றி கூறினார்.