புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றதால் மாநிலத் தலைவரை மாற்றக்கோரி பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எதிர்க்கட்சியில் போட்டியிட்ட வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். ஆளும் கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் தோல்விக்கு மாநில பாஜக தலைவர் செல்வகணபதி தார்மிக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அல்லது கட்சி தலைமை அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், பாஜக மாநிலச் செயலாளர் ரத்தினவேல் பாஜக தலைமை அலுவலகத்தில் மேல் சட்டை அணியாமல் இன்று போராட்டம் நடத்தினார். கட்சியின் தரைதளத்தில் உள்ள பாரத மாதா சிலையின் அருகில் தரையில் அமர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக சில பாஜக நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். பாஜக மாநிலத் தலைவரை மாற்றும் வரை தனது போராட்டம் தொடரும் என ரத்தினவேலு தெரிவித்துள்ளார்.