பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் இன்று ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ளது குந்தாரப்பள்ளி கிராமம். இக்கிராமத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் காய்கறி, ஆடு, மாடுகள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுவது வழக்கம். குறிப்பாகம் ஆடு, மாடுகளை விற்பனை செய்யவும், வாங்கவும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலையில் வருகிற 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் குந்தாரப்பள்ளி வாரச் சந்தைக்கு இன்று, விற்பனைக்காக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
இன்று அதிகாலை 5 மணிக்கு சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது. ஆடுகளை வாங்கிச் செல்ல தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். இங்கு கடந்த வாரம் 10 கிலோ எடைக் கொண்ட ஒரு கிடா ஆடு ரூ.12 ஆயிரம் வரை விலை போனது. ஆனால் இன்று சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலை போனது.
கும்மனூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஒன்றரை ஆண்டுகளாக வளர்த்து வந்த கிடா ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தார். சுமார் 80 கிலோ எடை கொண்ட அந்த கிடா ஆட்டுக்கு அவர் ரூ.1 லட்சம் விலை நிர்ணயம் செய்தார். இதேபோல், தென்ஆப்பிரிக்கா நாட்டு வகையை சேர்ந்த சவுத் ஆப்பிரிக்கன் போயர் இன ஆடும் விற்பனைக்கு வந்திருந்தது. சுமார் 65 கிலோ எடைக் கொண்ட இந்த ஆட்டின் விலை ரூ.85 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல், ஜோடி ஆடுகள் அதிகபட்சம் (எடையளவை பொறுத்து) ரூ.1 லட்சம் வரை விலை போனதாக வியாபாரிகள் கூறினர்.