திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், ஜூஸ் மிக்சருக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்துக்கு நாள்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த விமானங்களில் அவ்வப்போது தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதை, சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சிக்கு வருகை தந்தது.

இந்த விமானத்தில் தங்கத்தை நூதன முறையில் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த ஜூஸ் மிக்ஸர் சந்தேகத்திற்கிடமாக தோன்றியதால், அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து பிரித்துப் பார்த்தனர்.

அப்போது அதன் உள்ளே 2 கிலோ 579 கிராம் எடையிலான தங்கம் பிளேட் வடிவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.