மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி காரில் மோதிய ஓட்டுநர் : தேவகோட்டை விபத்தில் மூவர் படுகாயம்

தேவகோட்டை அருகே ஓட்டுநர் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி காரில் மோதினார். இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி மூவர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் வெங்கடேசன் (50). இவர் தனது குடும்பத்தினருடன் தேவகோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்றிரவு காரில் காரைக்குடிக்கு திரும்பினார்.

சடையன்காடு விலக்கு என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த வாகனங்களுக்கு வழிவிட வெங்கடேசன் காரை நிறுத்தினார். அப்போது தேவகோட்டையில் இருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்து காரின் பின்புறம் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

காருக்குள் படுகாயத்துடன் வெங்கடேசன், அவரது மனைவி கவிதா (46), மகன் நகுல் (20 ) ஆகியோர் சிக்கி கொண்டனர். அவர்களை அவ்வழியாக வந்தவர்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கவிதாவை மேல் சிகிச்சைக்காக காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், மதுபோதையில் இருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தனபாலை (38) அங்கிருந்தோர் தாக்கினார். பின்னர் அவரை ஆறாவயல் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.