“மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிகவினர் மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று விருதுநகரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளார். தேர்தல் என்பது சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டு கிடையாது. திரும்பவும் கொண்டு போய் பேட்டிங் கொடுங்கள் என்று சொல்ல முடியாது. நேர்மையான அதிகாரிகளால் வாக்குகள் எண்ணப்பட்டது. அவர்களும் ஏற்றுக் கொண்டு (தேமுதிக) வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது.
பின்னரே வீட்டிற்குச் சென்று அவரது தாயார் பிரேமலதாவை அழைத்துக் கொண்டு, மீண்டும் முதலில் இருந்து ஆட வேண்டும் என கூற இது கிரிக்கெட் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை மறு வாக்கு எண்ணிக்கை கோருவது சிறுபிள்ளைத்தனமானது. என்னைப் பொருத்தவரை மூவரும் தேர்தல் கமிஷனை பார்த்திருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட பொய்யான, வெறும் விளையாட்டுத்தனமான விளம்பரத்திற்காக செய்யும் விஷயங்களை தேர்தல் கமிஷன் கிளர்க் தான் அந்தப் பெட்டிஷனை வாங்கி உள்ளார்.
தேர்தல் கமிஷன் அதிகாரிகளே மனுவை வாங்கி இருக்க மாட்டார்கள். வெறும் விளம்பரத்திற்காக தொடர்ந்து செய்து வருகிறார்கள். பொய் பிரச்சாரத்தை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள். வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று டெல்லியில் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. விருதுநகர் மக்களவைத் தொகுதி மக்களின் குரலாக எனது குரல் டெல்லியில் ஒலிக்கும். வெற்றி என்பது ஒரு ஓட்டில் வெற்றி பெற்றாலும் அது வெற்றி தான். தேர்தல் கூட்டணி என்பது வித்தியாசமானது. ஜாதி அரசியல் காரணமாகவும் இருக்கலாம்.
மத்தியிலே ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாமல் மைனாரிட்டி அரசாக மோடி அரசு அமைந்துள்ளது. தனி பெரும் கட்சியாக இல்லாமல் நிதீஷ் குமாரையும் சந்திரபாபு நாயுடுவையும் நம்பி இருக்கின்ற கட்சியாக மாறி உள்ளது. உபி மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி உள்ளதாக கூறியுள்ள பாஜக அங்கும் தோல்வியுற்றுள்ளது. வருகின்ற அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, அடுத்து பீகார் மாநிலம் என நான்கு தேர்தலிலும் பாஜக தோல்வி அடைவார்கள். அதன் பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.