உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் உள்ள லோனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெஹ்தா ஹாஜிபூரில் உள்ள ஒரு மூன்று மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையை மீட்டதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் அங்கூர் விஹார் பாஸ்கர் வர்மா தெரிவித்தார். முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், “கட்டிடத்தின் தரை தளத்தில் தொடங்கிய தீ விரைவாக முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு பரவியது. இதில் அங்கு வசித்தவர்கள் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திலிருந்து 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் சைபுல் ரஹ்மான் (35), அவரது மனைவி நஜிரா (32), மகள் இஸ்ரா (7), ஃபைஸ் (7 மாதக் குழந்தை) மற்றும் பர்ஹீன் என்கிற பர்வீன் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த அர்ஷ் (10), உஸ்மா (25) ஆகியோர் டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் அர்ஷ் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்றனர்.