கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தோரை சிறப்பு பிரிவினராக கருத அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்புப் பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-18-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 ஏ தேர்வில் கலந்து கொண்ட மூன்றாம் பாலின விண்ணப்பதாரரான அனுஸ்ரீ என்பவர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தன்னை அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் எனக் கருதி, கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இடஒதுக்கீட்டு சலுகைகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்த போதும், மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை இதுசம்பந்தமான விதிகளை வகுக்கவில்லை எனக் கூறி, மூன்றாம் பாலினத்தவர்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஆண்களாகவோ, பெண்களாகவோ கருதாமல் தனிப் பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக பிரத்யேக விதிகளை வகுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை ஆண்கள், பெண்கள் பிரிவில் சேர்க்கக்கூடாது எனவும் அறிவுறுத்திய நீதிபதி, 2022-ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் மனுதாரரின் சான்றிதழை சரிபார்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி பவானி சுப்பராயன் தனது தீர்ப்பில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்புப் பிரிவினராக கருதியிருந்தால், மனுதாரர் தனது வாழ்க்கையின் வழியை கண்டிருப்பார். உரிய வாய்ப்புகளை வழங்க மறுத்தால், கல்வித் தகுதி பெற்ற மூன்றாம் பாலினத்தவர்கள், தற்போது சமூகத்தில் உள்ள அசாதாரணமான வாழ்க்கைக்கே தள்ளப்படுவர். அதனால் கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்கி, தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை. அதனால் அவர்களை சிறப்புப் பிரிவினராக கருத வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.