அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக இன்று பெமா காண்டு பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் முதல்வராகி உள்ளார். அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா மற்றும் பாஜக கட்சியினர் பங்கேற்றனர்.
மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது. போட்டியின்றி வெற்றி பெற்ற வேட்பாளர்களில் முதல்வர் பெமா காண்டுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக அமைச்சரவையில் பெண் ஒருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியாகி இருந்தது. இதில் தேசிய மக்கள் கட்சி (என்பிஇபி) 5, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 3, அருணாச்சல் மக்கள் கட்சி (பிபிஏ) 2, காங்கிரஸ் 1 இடங்களில் வெற்றி பெற்றன. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.