உத்தரப் பிரதேசத்தில் மணல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோயில் இன்று அதிகாலை வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மணல் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்து, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹர்தோயில் சாலையோரம் உள்ள வீட்டில் வசித்து வந்தவர்கள் வீட்டின் வெளிப்பகுதியில் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை மணல் பாரம் ஏற்றி வந்த ஒரு லாரி, எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஹர்தோய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேசவ் சத்ரா கோஸ்வாமி கூறுகையில், “லாரி கவிழ்ந்ததில் மணல் சரிந்து அதன் அடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் புதையுண்டனர். அவர்களை மீட்க அப்பகுதியினர் மணலை அகற்ற முயன்றனர். இருப்பினும் அதில் பலனில்லாததால், புல்டோசர் வரவழைக்கப்பட்டு மணல் அள்ளப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன.” என்றார்.

இறந்தவர்கள் அவதேஷ் (40), அவரது மனைவி சுதா (35), அவர்களது மூன்று குழந்தைகள் லல்லா (5), சுனைனா (11), புட்டு (4), அவர்களது உறவினர் கரண் (35), இவரது மனைவி ஹீரோ (30), இவர்களது மகள் கோமல் (5) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மற்றொரு 5 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.